கார்களின் ‘காட்ஸில்லா’ ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு வந்து விட்டது. ஆம்! நிஸான் GTR காரை அப்படித்தான் ஆட்டோமொபைல் உலகில் அழைக்கிறார்கள். இதன் ஆக்ஸிலரேஷன் அப்படி. 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3 விநாடிகளில் கடக்கும்; மணிக்கு 315 கி.மீ டாப் ஸ்பீடில் பறக்கும் GTR கார், ஆட்டோமொபைல் வெறியர்களின் செக் லிஸ்ட்டில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
ஏற்கெனவே வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் GTR காரில் பல மாற்றங்களைச் செய்து இந்தியச் சாலைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில் களமிறக்கியிருக்கிறது நிஸான். நேற்று மும்பையில் நடந்த விழாவில், GTR காரை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது நிஸான் டீம்.
4,170 மிமீ நீளமும், 1,895 மி.மீ அகலமும், 1,370 மி.மீ உயரமும் கொண்டுள்ள புதிய GTR காரின் வீல்பேஸ், 2,780 மிமீ. இந்த காரில் Y வடிவிலான அலாய் வீல்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன. 20 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டே டைம் LED ஹெட்லைட்ஸ், முற்றிலும் புதிய ஹெட்லைட் அமைப்பு செம ஸ்டைலிஷாக இருக்கின்றன. ஹெட்லைட்டுக்குக் கீழே, ஏர்வென்ட்டுகள் இருக்கின்றன. இதன் எடை, 1,752 கிலோ.
பின்புறம், GTR கார்களின் ஃபேவரைட்டான வட்ட வடிவத்திலான அதே டெயில் லைட் அமைப்புதான். அதிக வேகத்தில் செல்லும்போது காரை நிலைத்தன்மையுடன் வைத்திருப்பதற்காக, பின் பக்கம் பாடி கலரில் ஸ்ட்ராங்கான, ஸ்டைலான ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல், நான்கு எக்ஸாஸ்ட்டுகள். இப்படி ஸ்போர்ட்ஸ் காருக்கான தனித்துவத்தோடு எல்லாவிதத்திலும் அசத்தலாக இருக்கிறது நிஸான் GTR.
உட்புறத்திலும் வடிவமைப்பில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. உள்ளே 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. ஃபார்முலா-1 கார்கள்போல், இதன் ஸ்டீயரிங்கில் எக்கச்சக்க கன்ட்ரோல் பட்டன்கள் இருக்கின்றன. இதிலேயே மேனுவலாக கியர் மாற்றுவதற்காக பேடில் ஷிஃப்ட்டர்களும் கொடுத்திருக்கிறார்கள்.
3.8 லிட்டர் டர்போ சார்ஜ்டு, 6 சிலிண்டர் இன்ஜின், அதிகபட்சமாக 562bhp பவரை வெளிப்படுத்துகிறது. இதன் டார்க், 63.7 kgm. கியர் விஷயத்தில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்தான். ஆனால், டூயல் க்ளட்ச். இதில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.
மொத்தம் 7 கலர்களில் கிடைக்க இருக்கும் நிஸான் GTR-ன் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை 1.99 கோடி. இது சென்னை போன்ற நகரங்களில் ஆன்ரோடுக்கு வரும்போது, கிட்டத்தட்ட 2.50 கோடிக்கு மேல் இருக்கலாம்.
0 comments:
Post a Comment